Wednesday, December 3, 2014

கந்த சஷ்டி கவசம் 


கந்த சஷ்டி கவசம் 

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.

முருகன் சூரனை அழித்தல்

ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.

கந்த சஷ்டி விரதம்

இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

பால தேவராய சுவாமிகள் அருளியது

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; 
துன்பம் போம்

நெஞ்சில் பதிப்போர்க்குச் 

செல்வம் பலித்துக்
கதித்தோங்கும்

நிஷ்டையுங் கைகூடும்

நிமலர் அருள் கந்தர் சஷ்டி 
கவசம் தனை.

அமரர் இடர்தீர அமரம் 

புரிந்த

குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட


மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக


இந்திரன் முதலா எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக!

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக


ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரவண பவனார் சடுதியில் வருக


ரவண பவச ர ர ர ர ர ர ர

ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விநபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிற நிறென


வசுர வணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்


பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்


கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!


ஆறு முகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்


ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்


இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென


நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி


டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து


என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று


உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

எந்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க


அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க


நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க


கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க


வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க


வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க


கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகளி ரண்டும் கருணைவேல் காக்க


முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க


எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க


ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க


பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்


கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்


கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர் களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட


ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைக ளுடனே பலகல சத்துடன்


மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்


அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட


வாய்விட் டலறி மதிகெட் டோட

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய


கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு


குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெகுண்டது வோடப்


புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்


ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு


குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்


எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்

ஈரேழு உலகமும் எனக் குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா


மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திரு நாமம்

சரவண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே


பரிபுர பவனே பவமொளி பவனே

அரிதிரு மருகா அமரா வதியைக்

காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வே லவனே


கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா

தனிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா



பழநிப் பதிவாழ் பாலகு மாரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே


காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவச மாக


ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணிய

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னரு ளாக


அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

மெத்தமெத் தாக வேலா யுதனார்

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க


வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்


வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்


பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்


கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி


நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்துநீ றணிய



அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்


நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை


வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்


சர்வ சத்ரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்

வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத் மாவைத் துணித்தகை யதனால்

இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த


குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி!

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி!


தேவர்கள் சேனா பதியே போற்றி!

குறமகள் மனமகிழ் கோவே போற்றி!

திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!


கடம்பா போற்றி கந்தா போற்றி!

வெட்சி புனையும் வேளே போற்றி!

உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!


சரணம் சரணம் சரவண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்!

Sources:



Sunday, November 30, 2014

காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க)

காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க)

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். 

குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது. எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை  தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. 

இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். 

இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:


முருகன் பாடல்கள்

முருகன் பாடல்கள்

1. கந்தன் காலடியை...

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளை இல்லை மருமகன்தான் திருமகன்  (கந்)

உமையவள் தன் வடிவம் மதுரை மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சி காமாட்சி
கங்கையிலே குளிக்கிறாள் காசி விசாலாட்சி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கிணை எவனுண்டு  (கந்)

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவர்க்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள்
என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும்
மற்றவற்றைத் தள்ளுங்கள்  (கந்)

2. கோடிமலைகளிலே....

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை - எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை - எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை - எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் - மருதமலை
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலங்காக்கும் வேலய்யா - ஐயா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் - ஐயா
உனது மங்கள மந்திரமே

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தையா ஆ...ஆ...ஆ....

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடி என் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக
ஏழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன்
சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன்
பக்திக் கடலென பற்றுப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே! அழகிய திருமகனே
காண்பதெல்லாம் உனது முகம் - அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே ! குருபரனே ! அருள் கதியே சரவணனே

பனி எது மழை எது நதி எது கட லெது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய்... குகனே.... வேலய்யா...

3. வருவாண்டி தருவாண்டி....

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள் வாண்டி
அவன் ஆண்டி பழனியாண்டி
சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி
அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி
என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி
அவன் தாண்டி - பாலபிஷேகங்கள் கேட்டாண்டி - சுவை
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி  (வரு)

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
பழனிமலையாண்டி பழனிமலையாண்டி பழனிமலையாண்டி

4. குன்றத்திலே குமரனுக்கு...

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
தெய்வயானைத் திருமணமாம் - திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள்
முருகப் பெம்மானை முருகப் பெம்மானை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா ! வெற்றிவேல் முருகா !
வேல் முருகா ! வெற்றிவேல் முருகா !

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகராப் பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா அரோகரா
வெற்றி வேல் முருகா அரோகரா -

5. திருச்செந்தூரின் கடலோரத்தில் ....

திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக்காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமர னவன் கலையா

மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுமம்மா ஆறுமுகம் இங்கு
பொன்னழகு மின்னிவரும் வண்ண மயில் கந்தா
கண்மலரில் தன்அருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுறுகி நின்றால்
கந்தா முருகா... வருவாய் - அருள்வாய் -முருகா

6. முருகா என்றதும் உருகாதா....

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா  (முருகா)

முறை கேளாயோ குறை தீராயே
மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்  (முருகா)

ஜன்ம பாபவினை தீரவே பாரினில்
தினமே பதாம பஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவபாலா
சர்வமும் நீயே சிவசக்தி வேலா  (முருகா)

7. சிந்தனை செய்மனமே..

சிந்தனை செய் மனமே - தினமும்
சிந்தனை செய் மனமே செய்மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை சண்முகனை  (சிந்)

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் நாவலனை - குகனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை ஆதலினால் (சிந்)

இன்றே அருமறை பரவிய சரவண பவ குகனை  (சிந்)

8.ஆறுமுகமான பொருள்....

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகனிவன் முருகனெனும் இனிய பெயர் கொண்டான்
காலமகள் பெற்ற மகன் கோலமுகம் வாழ்க !
கந்தனென குமரனென வந்த முகம் வாழ்க  (ஆறு)

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தண்ணிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று
பால்மணமும் பூமணமும் மணக்கும் முகம் ஒன்று
காவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளிரதம் போலவரும் பிள்ளைமுகம் ஒன்று (ஆறு)

9. பழம் நீயப்பா ஞானப் பழம்...

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ்ஞானப்பழம் நீயப்பா
சபைதன்னில் உருவாகி - புலவோர்க்கும்
பொருள் கூறும் பழம் (நீயப்பா)
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - நெஒற்றிக்
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்... திரு
கார்த்திகைப் பெண் பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த  (பழம்)
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றோரு முண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கைலையில்
நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள தந்தைக்கு
தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் - ஒளவையின்
தமிழுக்கு உரிமையுண்டு ஆறுவது சினம் கூறுவது தமிழ்
அறியாத சிறுவனா நீ ! மாறுவது மனம் ! சேருவது யினம்
தெரியாத முருகனா நீ !
ஏறுமயில் ஏறு ஈசனிடம் நாடு ! இன்பமும் காட்டவா நீ 
ஏற்றுக் கொள்வார் ! கூட்டிச்செல்வேன் ! என்னுடன் ஓடிவா நீ

10. பால் மணக்குது....

பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே
மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே அப்பப்பா
முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே
எங்கும் தேடி உன்னைக் காணா(து) மனமும் வாடுதே
முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே
தேனிருக்குது தினையிருக்குது தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடியாம்
சர்க்கரைக் காவடி சந்தனக் காவடி சேவல் காவடியாம்
சர்ப்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றிகாவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
அதோ வாராண்டி பழனி ஆறுமுகம் தாண்டி - அவன்
போனா போராண்டி முருகன் தானா வாராண்டி
வேல் இருக்குது மயில் இருக்குது விராலிமலையிலே
இந்த விராலிமலையிலே
மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் விராலி
மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம்
முருகா உன்னைத் தேடி தேடி எங்கும் காணேனே

11. திருநீரில் மருந்திருக்கும்..

திருநீரில் மருந்திருக்கும் தெரியுமா?
திருநீரில் மருந்திருக்கும் தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கும் புரியுமா
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கும் புரியுமா முருகன் (திருநீரில்)

அருள் மணக்கும் ஐயனின் திருமருந்து
நல்ல அறிவுக்கண்ணை திறந்து வைக்கும் அருமருந்து
அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து
நல்ல ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும்மருந்து வேலன்  (திருநீரில்)

கன்னியரை கற்பு வழியில் நடத்து மருந்த
இளம் காளையரை காலமெல்லாம் காக்கும் மருந்து
மங்கையர்க்கு மழலை செல்வம் கொடுக்கும் மருந்து
திரு மங்களமாய் குங்குமமும் வழங்கும் மருந்து குமரன்  (திருநீரில்)

கற்பனையில் கவிதைபாட செய்யும் மருந்து
பெரும் கள்வரையும் திருந்திவாழ செய்யும் மருந்து
முன்வினை தந்தஊழ் எல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்செல்வமெல்லாம் கொடுக்கும் மருந்து கந்தன்  (திருநீரில்)

12. ஆறெழுத்தில் மந்திரமாம்

ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவண பவ எனும் மந்திரமாம்  (ஆறெ)

ஆறுமுகம் தரும் மந்திரமாம் ... நல்ல
அறிவை வளர்க்கும் மந்திரமாம்
ஆறுபடையின் திருமந்திரமாம் ... நல்ல
அன்பை வளர்க்கும் மந்திரமாம்
நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் ... நல்ல
நீதியைக் காக்கும் மந்திரமாம்
அஞ்செழுத்தான் பெற்ற மந்திரமாம் ... நல்ல
அறநெறி காட்டும் மந்திரமாம்  (ஆறெ)

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் ... நல்ல
வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் ... பல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்  (ஆறெ)

13. காவடிகள் ஆடி வரும்....

காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே ... முருகா
ஆட்டத்திலே ஆடல்
கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே முருகா கூட்டத்திலே (பால் காவடிகள்)
சேவடி காணவென்றே ஓடி வருவார் ... அவர்
சிந்தையிலே உந்தனையே பாடி வருவார் ... முருகா பாடி வருவார்  (மச்ச காவடிகள்)
ஏறாத மலையினிலே ஏறி வருவார் ஏறுமயில்
வாகனனை காண வருவார்
உள்ளவனும் இல்லா என்ற பேதமில்லை .... அருள்
வள்ளல் உந்தன் அன்புக் கொரு எல்லை இல்லை (பன்னீர் காவடிகள்)
தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார் ... வள்ளி
தெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார்  (பூங்காவடிகள்)

14. கற்பனை என்றாலும்....

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் !
நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் !
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே  (கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே  (கற்பனை)

15. முருகனுக்கொரு நாள்...

முருகனுக்கொரு நாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக்கொருநாள் திருநாள்
நல்ல கார்த்திகை பெருநாள் ஒரு நாள்  (முருக)

வைகாசி விசாக திருநாள்
வண்ணக்கதிர் வேலன் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோம வாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொரு திருநாள்
கந்தன் கருணைபொழிகின்ற பெருநாள்  (முருக)

சரவணன் பிறந்த திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒரு நாள்
கந்தனின் காலடி ஆடிடும் பெருநாள்
வள்ளி குமரனின் மண நாள்
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள்  (முருக)

16. ஒருமுகமாய் நின்று...

ஒருமுகமாய் நின்று பலமுகம் பார்த்தாலும்
திருமுகம் போலாகுமா.... முருகா உன்
ஆறுமுகம் போலாகுமா
இனிக்கும் மதுவை வைத்த விழிகளுண்டு... அன்பு
இன்பமெல்லாம் உதிர்க்கும் கருணையிலே
பனிக்கும் கதிரவன் போல் இருக்கும் கந்தனே
பாதம் தொட்டால் மணக்கும் படைப்பு அதில் சிரிக்கும்
கருவாகி உருவாகி காக்கும் அருளாகி
பொதுவாகி நலமாகி போற்றும் பொருளாகி
மலைகண்ட இதயமெல்லாம்குடி கொண்ட வேலவனே
வணங்கி நின்றால் இரங்கிவரம் கொடுக்கும் சிவனே

17. கருணை முகங்கள் ஓராறு....

கருணை முகங்கள் ஓராறு காக்கும் கரங்களோ ஈராறு
முருகன் வாழும் வீடாறு
முகம் பார்த்து இறங்க வேராறு கந்தன்
துணை அன்றி ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை தீர்ப்பது குகன் வேலை
வேலை போற்றுதல் வாழ்வின் வேலை  (கருணை)

அடியார்கள் அகமே அவன் கோவில்
அன்பே ஆலய தலைவாயில்
குடியாய் இருப்பவன் குறைதீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்

18. வேல் வந்து வினை தீர்க்க....

வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
பால் கொண்டு நீராடி பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில்
கந்தன் எனை கண்டானடி எந்தன் சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி  (வேல்)

19. முருகா உந்தன் சிரிப்பு...

முருகா உந்தன் சிரிப்பு முத்தமிழின் உயிர் சிரிப்பு
குமரா உந்தன் சிரிப்பு
குழந்தையின் முதல் சிரிப்பு
கண்களிலே பொங்கி வரும் அருள் சிரிப்பு
உந்தன் கைகளில் தாங்கிவரும் வேல் சிரிப்பு
புன்னகையில் ஏந்தி வரும் பால் சிரிப்பு
அந்த பழனியிலே தோன்றிவரும் சிரிப்பு
தத்துவங்கள் பேசி வரும் தவச்சிரிப்பு
என்றும் தென் கடலில் அலைபாயும் புன் சிரிப்பு
எத்திசையும் கொடிபறக்கும் புகழ் சிரிப்பு
கருணை பொழிந்து கொண்டே
மணம் கொடுக்கும் உன் சிரிப்பு

20. ஆயிரம் கோடி நிலவுகள்...

ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு
அந்த ஆதிசிவன் பிள்ளைமேனி முழுவதும் திருநீறு
வாவையூரனை கீரி கிழித்திடவேலோடு
பன்னிரு கையென வந்திருக்கிற இடம் திருச்செந்தூரு
கோவண சண்முக சுவாமியின் மார்களில் பாலோடும்
அவன் குங்கும தாமரை கண்களில் சங்கத்தமிழ் ஓடும்
தாய் பராசக்தி அவள் தந்த அருளோடும்
அவன் வண்ணச்சிறு அடி வைத்த இடம் ஒரு பூவாகும் (ஆயிரம்)

நம்பிதொழுகிற நெஞ்சின் கவலைகள் தூளாகும்
மனம் நாடபிறந்த அவன் ஞானசுந்தரி களியாகும்
கோயில்படிகளில் வேலும் மயிலும் விளையாடும்
அந்த கூத்துக்கு தகுந்த மாதிரி சேவல் இசைபாடும்
குன்னடி என்றென்ன பிரமிக்கச் சிலையானவன்
தந்தைகுந்தி குனிந்திட மந்திரம் சொல்லி உருவானவன்
வண்ணகுமரிகள் நெஞ்சத்து நல்ல துணையானவன்
பல குன்றுகளின் சிறுதுண்டுடன் நின்றுதவமானவன்

வருகைப் பதிகம்

அறுமுகன் ஆனவனே! கரிமுகன் சோதரனே!
ஒருமுகம் ஆகஉந்தன் திருமுகம் நாடுகின்றேன்!
மயில்முகம் முன்தோன்ற(வுன்) மலர்முகம் உடன்தோன்ற
அயில்வடி வேலேந்தி அழகுடன் வருவாயே!

குஞ்சரி இடையோடும், குறமகள் இதழோடும்
கொஞ்சிடும் மணவாளா! குவலயப் பரிபாலா!
தஞ்சமென் றுன்இருதாளைத் தயவுடன் பணிகின்றேன்!
விஞ்சிடும் அன்புடனே விரைவினில் வருவாயே!

தகதக மயிலேறித் தடைதகர் கொடியேந்தி
இகபர நலமருள எனதிடர் நீகளையச்
சுகநல வளமருளச் சூட்சும வேலேந்திப்
பகவதி பாலகனே! பாங்குடன் வருவாயே!

அரிதிரு மருகோனே! அரன்விழிச் சுடரோனே!
கரிமுகற் கிளையோனே! கிரிபல வளர்வோனே!
அருந்தமிழ் ஆர்வலனே! அழகிய வேலவனே!
வருந்திடும் எனைஆள வடிவுடன் வருவாயே!

சதுர்முகன் பணிபவனே! சதுர்மறை நாயகனே!
சதுர்புஜ மாலவனின் சாகச மருமகனே!
சதுரங்க வாழ்வினிலே சதிபகை போயொழியச்
சதுர்வேல் கரமேந்திச் சண்முகா வருவாயே!

எண்திசை சூழுகிற என்வினைப் பகைமாள
உன்திசை நான்பணிந்து உருகியே கவிபாட
விண்மிசை மயிலேறி வேலதைக் கரமேந்தி
என்கலி யதுதீர இறைவனே வருவாயே!

பன்முக வாழ்வினிலே பலமுகம் கொண்டுழன்றேன்
உன்முகம் ஒன்றினையே உள்முக மாக எண்ணிச்
சண்முகா உன்னழகில் சகலமும் நான்மறந்தேன்!
இன்முகம் நீகாட்டி எனைஆள வருவாயே!

உருகிடும் அடியவரின் உளமெலாம் நிறைபவனே!
மருகிடும் பக்தர்களின் மருளினைக் களைபவனே!
அருகினில் வந்தெனது அவலங்கள் போக்கிடவே
முருகெனும் பேரழகே ! மூர்த்தியே வருவாயே!

ஒருபெரும் வேலெறிந்து கிரிபல பிளப்போனே!
ஒருஎழில் மயிலேறி உலகெலாம் வருவோனே!
ஒருதனிக் கொடியேந்தி ஊழ்வினை களைவோனே!
ஒருமுறை என்மனதுள் ஒளியென வருவாயே!

குறமகள் தேனிதழின் சுவைதனை அறிவதற்குப்
பரண்மனை கீழிருந்து சேவகம் புரிபவனே!
திறமுடன் வேலெறிந்து தேவரைக் காத்தவனே!
பரிவுடன் எனைஆளப் பழனியே வருவாயே!

தேவரும் முனிவர்களும் தெளிர்ந்தநல் ஞானிகளும்
யாவரும் புகழ்ந்தேத்தும் ஓவியப் பேரொளியே!
ஆவலும் மிகக்கொண்ட டியவன் பணிகின்றேன்!
சேவலாம் கொடியேந்திச் சீக்கிரம் வருவாயே!

தண்டொடு பழனியிலே தனிமையில் நிற்பவனே!
பெண்டுகள் இருவரையும் பெருமகன் மறந்தாலும்
கன்றெனை மறப்பதுவோ ! கந்தனே சரியாமோ!
நன்றெனைக் காத்திடவே நலமுடன் வருவாயே!

உருவினில் அழகாகி, உணர்வினில் கனலாகி
அருளினில் நிறைவாகி அருணையின் ஒளியாகி
குருசிவன் குருவாகிக் குவலயம் காப்பவனே!
நிறைவுடன் எனைக்காக்க நிர்மலா வருவாயே!

முன்வினைப் பயன்யாவும் மூர்க்கமாய்ச் சூழ்ந்தாலும்
உன்பதம் நான்பணிந் துருகிடும் வேளையிலே
என்குரல் அதுகேட்டு இருதுணை புடைசூழக்
கன்றெனைக் காத்திடவே கடுகியே வருவாயே!

பிணியினால் உடல்சோரப் பெருமகன் உனைநாட
நனிபெரும் மயிலேறி நலமுடன் எனக்கருளக்
குணமிகு வள்ளியுடன் குழவியென் இடர்களைய
மணமிகு மலர்சூடி மகிழ்வுடன் வருவாயே!

கனவிலும் நனவிலுமுன் கழல்களை நான்பணிவேன்!
மனதிலும் செயலிலும் உன் மலரடி நான் தொழுவேன்!
எனதெனும் மமதையினை இறைவனே நான் களைவேன்!
குணமிகு மயிலேறிக் குமரனே வருவாயே!

சனியுடன் கோள்யாவும் சேர்ந்தெனை வதைத்தாலும்
கனிவுடன் முருகாவென் றுனதடி நான்பணிய
தனிமயில் மீதேறித் தயவுடன் எனைக்காக்கத்
துணையிரு மயிலுடனேத் துரிதமாய் வருவாயே!

மந்திர தந்திரமும் மாயையாம் வித்தைகளும்,
எந்திர சூனியமும் ஏவலும் ஏசல்களும்
எந்தனைச் சூழாமல் எந்தையே நீ காக்கச்
சுந்தர மயிலேறிச் சுடரென வருவாயே!

சிக்கலில் வேல்வாங்கும் செந்திலம் பதிவாழ்வே!
தெக்கணம் ஆளுகிற தென்னவன் திருமகனே!
இக்கலி யுகந்தனிலே என்கலிதனை நீக்கி
சிக்கலைப் போக்கிடவே சீக்கிரம் வருவாயே!

வினைவழிச் சாபங்களும் விதிவழிச் சோகங்களும்
எனைவழி மறித்தாலும் உனைவழி படும்போதில்
உடன்வழித் துணையாகி உன்னத மயிலேறித்
திடவழி எனக்கருளத் தெய்வமே வருவாயே!

தையலர் இருவருடன் தணிகையில் வாழ்பவனே!
பொய்வளர் பூமியிலே புழுவென வாழுகிறேன்
மெய்வளர் உயர்ஞானம் மேன்மையாய் எனக்கருளத்
தையலர் துணையோடு தயவுடன் வருவாயே!

தென்பரங் குன்றமதில் திகழ்கிற வடிவழகா!
என்மனக் குன்றமதில் எழுந்தருள் சிவபாலா!
கண்மணி ஆனவனே ! கார்த்திகை பாலகனே!
என்வினை அதுதீர எழிலுடன் வருவாயே!

கழல்அணி திருவடியும் கவின்மிகு எழில்முகமும்
இடைஅணி வெண்துகிலும் எழில்மிகு திருமார்பும்
என்மனத் திரைவானில் என்றுமே ஒளிரும்படி
சண்முகப் பேரழகே சரவணா வருவாயே!

வேல்முருகா ! வேல்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!

ஈசனாரின் தோளில் ஏறிப் பேசுவது மந்திரம்!
மாசிலாத வள்ளிமாரில் மகிழுவதுன் தந்திரம்!
பாசங்கொண்ட பக்தருக்கு அருளுவது உன்திறம்!
வாசியோக வித்தைகளின் சாகரமே சுந்தரம்!

நாடிமூன்றின் நடுவினிலே சோதியாக ஒளிர்பவன்!
நல்லஆறு சக்கரத்தில் நர்த்தனங்கள் புரிபவன்!
ஓதுகின்ற செந்தமிழில் ஓவியமாய் மிளிர்பவன்!
உள்ளமென்ற கோவிலிலே தெய்வமாகி அருள்பவன்!

வேலெடுத்து சூரமலை விண்ணதிரப் பிளந்தவன்!
காலெடுத்து வள்ளிமனை கால்கடுக்க நடந்தவன்!
சூலெடுத்த சக்திடம் தூயவேலை பெற்றவன்!
கோலெடுத்து ஆண்டியாகிக் கோமகனாய் நின்றவன்!

பழனிமலை மீதில்வளர் பண்டார நாயகா!
பாரமலை மீதில்அருள் பாலகனே தேசிகா!
அழகர்மலைப் பழமருந்தும் சோலைமலை நாயகா
அஞ்சுமுகன் நெஞ்சமதில் வாழுகிற பாலகா!

கோபமுடன் காவிகட்டிச் சாமி ஆன பாலகா!
ஆவலுடன் வள்ளிபதம் நாடிவந்த சேவுகா!
தேவமகள் குஞ்சரியை ஆளுகிற சுந்தரா!
பாவமுடன் பாடுகிற பக்தருக்கும் அருளவா!

காவடிகள் ஆடும்போது கூடவரும் சண்முகம்!
பாவடிகள் பாடும்போது தாளம்போடும் உன்முகம்!
பூவடியைச் சரணடைய நாடுகிறோம் சன்னதி!
சேவடியைத் தொழுதவர்க்குச் சேருவது நிம்மதி!

என்றுமுள செந்தமிழில் பாடுவது உன்புகழ்!
என்றுமுள சண்முகனை நாடுவது என்மனம்!
என்றுமுள வடிவேலே எங்களுக்கு வழித்துணை!
என்றுமுளை வண்ணமயில் யாவருக்கும் விழித்துணை !

எண்ண எண்ண விளங்காது இகபரத்தின் ரசகியம்! 
எழுத எழுத அடங்காது ஏரகத்தின் அதிசயம்!
உழுது உழுது உன்நாமம் உள்ளமதில் பதிக்கிறேன் !
விழுதுவிட்டு விருட்சமாக வேலவனே ஓடிவா!

ஆறுமுகம் ஆகவந்து ஆதரிக்கும் சண்முகா!
ஆறிரண்டு விழிகளிலே அருள்சுரக்கும் பாலகா!
ஓரெழுத்து மந்திரத்தை ஓதுகிற வித்தகா!
யாரெடுத்து ஓதினாலும் அருளுகிற சத்தியா!

வேலெழுத்து ஆடுகையில் வெற்றியெனக் கூவுவாய்!
கோலெடுத்து ஆடுகையில் கொஞ்சிநடை போடுவாய்!
காலெடுத்து நடந்தவரின் கவலைகளைச் சாடுவாய்!
சூல்கொடுத்து மங்கையர்க்கும் சந்ததியை அருளுவாய்!

நூறுநூறு ஜென்மமாக உந்தனடி தேடினேன்!
வேறுகதி இல்லையென்று வேலவனைப் பாடினேன்!
சேருபோலக் கர்மவினை சூழநானும் வாடினேன்
ஆறுமுகம் அருளும் என்று அன்புடனே நாடினேன்!

விண்ணைஆளும் சக்தியெலாம் வழங்குவது உன்குணம்!
மண்ணிலுள்ள போகங்களில் மயங்குவது என்குணம்!
கண்ணிணாளே கர்மவினை போக்குகிற வைத்தியா!
என்னாளும் உன்பாதம் நான்பணிய வைத்தவா!

பந்தம் என்று வந்ததெல்லாம் பழனியப்பன் ஆகுமோ!
சொந்தமென்று சொன்னதெல்லாம் சுந்தரானாய் ஆகுமோ!
கந்தனென்று சொல்லிச்சொல்லி கதறிடுவாய் நெஞ்சமே!
சொந்தமுடன் வந்துநம்மை ஆதரிப்பான் செல்வனே!

மெல்லிடையாள் வள்ளியிடை அள்ளுகிற பாவலா!
துள்ளுமயில் விட்டுவந்த வள்ளிமனைக் காவலா!
புள்ளிமானைத் தேடிவரப் புதியவழி கண்ட வா! 
வள்ளிமானைக் கண்டவுடன் வசமாகி நின்ற வா!

ஆறுமுகன் காதலுக்கு நாரதனின் முன்னுரை!
ஆறுமுகன் மணமுடிக்க ஆனைமுகன் அக்கரை!
யானைமுகன் முன்னிலையில் ஆலிங்கண சோபணம்!
வானகத்து வேலனுக்குக் கானகத்தில் திருமணம்!

இல்லறத்தின் இனிமைகளை எங்களுக்குத் தந்தவன்!
ஏகாந்த நிலைதனிலே எங்களுக்குள் ஒளிர்பவன்!
கள்ளமில்லைக் கபடுஇல்லை காதல்உண்மை வாழ்விலே!
வெள்ளைமனம் போதும் எங்கள் வேலவனைப் பாடவே!

சொல்லச்சொல்லச் சுவைமணக்கும் சுந்தரனின் காவியம்!
வெள்ளமென உள்ளமெலாம் பாய்ந்துவரும் ஓவியம்!
சொல்லெடுத்து கவிமாலை செந்தமிழ் சாற்றினேன்!
வில்லெடுத்தோன் திருமருகா விரைந்து அதைச் சூடவா!

கோவில் மணி ஓசையிலே கொலுமிருக்கும் நாதமாய்
நாவில் வந்து குடியிருக்கும் நல்லதமிழ்த் தெய்வமே!
பூவில் மனம் போலவந்து புன்னகைக்கும் மன்னவா!
சேவல் மயில் வேலுடனே செந்தூரா இங்குவா!

அறிவு என்ற ஆலயத்தை அலங்கரிக்கும் அய்யனே!
அன்புகொண்ட நெஞ்சமதில் தஞ்சமாகும் செல்வமே!
தெளிவுநாடும் யாவருக்கும் தேர்ந்தஞானம் அருளுவாய்!
பரிவுகொண்டு எங்களையும் பண்புடனே ஆளுவாய்!

மண்ணை உண்டு மண்ணில்வாழும் மண்புழுவாய் வாழ்கிறேன்!
உன்னைஎண்ணி உருகிவாழும் உன்னதங்கள் வேண்டினேன்!
அந்தநிலை நீயருள்வாய் ஆறுமுக நாயகா!
சந்தமிகு செந்தமிழை ஆளுகின்ற பாலகா!

மழையாய் வருவாய் முருகா!

ஜெய ஜெய முருகா ஜெய ஜெய முருகா
ஜெய ஜெய முருகா சரணம்! (ஜெய)

உலகம் உய்ய வரங்கள் கேட்டு
உந்தன் சன்னதி வருகின்றோம்!
கலகம் கயமை இவைகள் நீங்கக்
கந்தா முருகா அருள் புரிவாய்!
விளையும் பூமி மழையால் மகிழ
வெற்றி வேலா அருள்புரிவாய்!
அலையும் மேகம் நிலையாய்ப் பொழிய
ஆறுமுகமே அருள்புரிவாய்! (ஜெய)

படைவீ டாறின் முதலாம் வீட்டில்
பாங்குடன் ஆளும் வேலவனே!
தடைகள் யாவும் போக்கி நீயும்
தக்க மழையை உடனருள்வாய்!
இடையன் மருகா! ஈசன் மகனே!
எங்கள் தமிழின் காவலனே!
கடைமடை நிறையக் கனமழை பொழியக்
கந்தா முருகா அருள்புரிவாய்! (ஜெய)

ஊறும் நீரும் ஓடும் நதியும்
உன்னத மழையின் அருளன்றோ!
பாரில் அறங்கள் தழைத்து நிற்றல்
பண்பாம் மழையின் திறமன்றோ!
ஊரும் உறவும் செழித்தே ஓங்க
உன்னத மழையை நீயருள்வாய்!
மாரில் ஊறும் பாலாய் நீரும்
மண்ணில் ஊற நீ அருள்வாய்! (ஜெய)

நஞ்சைப் பயிர்கள் விளையும் பூமி
நாறிப்பாலை ஆவதுவோ!
புஞ்சை நிலங்கள் மழையே இன்றிப்
புழுதிக் காடாய் ஆவதுவோ!
நெஞ்சைப் பிளக்கும் துயரில் உழவர்
நித்தம் நெகிழ்ந்து வாடுவதோ!
கெஞ்சிக் கதறிப் பணிந்தோம் முருகா!
கீர்த்தி மழையை உடன் அருள்வாய்! (ஜெய)

ஏரிகுளங்கள் காய்ந்து எங்கும்
எருக்கம் பூக்கள் மலருதடா!
வாரிவழங்கும் தஞ்சை பூமி
வறுமைப் பிணியில் வாடுதடா!
சீறிப் பாய்ந்த காவிரி அன்னை
சிறுத்து ஓடை ஆனதடா!
மாரித்தாயின் மகனே நல்ல
மழையைத் தந்து அருள்புரிவாய்! (ஜெய)

வைகை பெருக மதுரை மகிழ
வளமாய் மழையை நீயருள்வாய்!
தையற் பெண்ணாய்த் தஞ்சை நிலங்கள்
தழைத்துச் செழிக்க நீயருள்வாய்!
மைவிழி மாதர் மகிழ்ந்தே ஆட
மாநிலம் எங்கும் மழையொழியப்
பொய்கை எல்லாம் புனலாய் வெள்ளம்
பூரித் தோட நீயருள்வாய்! (ஜெய)

ஏரி கண்மாய் குளங்கள் என்று
எத்தனை எத்தனை வகை செய்தோம் 
யாவும் இன்று நீரே இன்றிப்
பாலைவனமாய் ஆனதடா!
தாயின் மாரில் பாலைத் தேடித்
தவிக்கும் சேய்கள் போலானோம்!
ஆயினும் உந்தன் அருளை நம்பி
அன்புடன் வந்து பணிகின்றோம்! (ஜெய)

இருவிழி நனைய இருகரம் கூப்பி
ஈசன் மகனைப் பணிகின்றோம்!
அறுமுக மான சரவண பவனே!
அருள்மழை பொழிய உடனருள்வாய்!
இருதுணையோடு எழில் மயிலேறி
ஏரகம் ஆளும் பூரணமே!
ஒருதுணை என்றுன் திருவடி பணிந்தோம்
உன்னத மழையை உடன்அருள்வாய்! (ஜெய)

தென் பரங் குன்றம் சன்னிதி வந்து
உன்பதம் பணிந்து அழுகின்றோம்
நன்றென நீயும் நல்மழை தந்து
நற்றமிழ் மண்ணைக் காத்திடுவாய்!
குன்றுகள் தோறும் கூர்வேல் ஏந்திக்
குவலயம் காக்கும் பேரழகா!
கன்றுகள் எங்கள் கவலைகள் தீரக்
கனமழை தந்து நீயருள்வாய்! (ஜெய)

பளபள வென்று வானம் மின்னப்
பருவ மழையை நீயருள்வாய்!
சலசல வென்று நதிகள் பெருகச்
சண்முக நாதா நீயருள்வாய்! 
மளமள வென்று நீர்நிலை நிறைய
மங்கள மழையை நீயருள்வாய்! 
கலகல வென்று உழவர் மகிழக்
கருணை மழையை நீயருள்வாய்!  (ஜெய)

கரிய மேகம் சூழ வேண்டிக்
கந்தா நானும் கவிபாடக்
கரிய மேகம் சூழல் கண்டு
கந்தன் மயிலும் தானாடக்
கரிய மேகம் மழையை நல்கக்
களிப்பில் உழவர் மகிழ்ந்தாடக்
கரிய மாலின் மருகா கந்தா
கணத்தில் மழையாய் உடன் வருவாய்! (ஜெய)

முருகன் அருள் வேண்டல்

ஆறுமுக மானவடி வேலவனின் புகழ்பாட
ஆனைமுகம் அருள வேண்டும்!
ஐந்தொழில் புரிகின்ற சிவனோடு உமையாளும்
அன்புடன் அருள வேண்டும்!
சீருங்கடல் அலைமீதில் வாழுமுயர் மாலவனும்
சிறப்போடு அருள வேண்டும்!
சிங்கார இலக்குமித் தாயாரும் எனைவாழ்த்திச்
சீரோடு அருள வேண்டும்!
மங்களத் தேவானை மாதரசி வள்ளியும்
மகனெனக் கருள் வேண்டும்!
பங்கயத் தாமரை வாழ்கின்ற வாணியும்
பாங்குடன் அருள வேண்டும்!
எங்களின் குலதெய்வம் எழிலான பகற்சாலன்
இருதுணை யோடு வந்து
பொங்கிடும் பக்தியால் பூக்கின்ற கவிதைக்குப்
புத்தொளி அருள வேண்டும்!

சிவனாரின் விழிசீறச் செஞ்சுடர் வடிவாகச்
சிவபாலன் வந்துதித்தாய்!
சிலகாலம் கார்த்திகைப் பெண்களும் சீராட்டச்
செல்வனாய் வளர்ந்து வந்தாய்!
உமையாளின் கரம்பட்டு ஒன்றான சிவநேசன்
ஓங்கார வடிவு மானாய்!
உண்மையை உணராத நான்முகன் சிரந்தனில்
ஓங்கியே குட்டும் வைத்தாய்!
கனிவோடு பழந்தனைக் கற்பகம் பெற்றிடக்
கருத்திலே எண்ணம் கொண்டு
தனியாக மயிலேறிப் புவனங்கள் நீ சுற்றித்
தண்டோடு நின்று விட்டாய்!
மணியான என்மகன் மனைக்காக்கும் சண்முகன்
மலையிலே நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

சுவையாகக் கவிபாடும் சுந்தர அவ்வைக்குச்
சுட்டபழம் அன்று தந்தாய்!
சபையிலே சுடராக நீவந்து அருணகிரி
சங்கடம் தீர்த்து வைத்தாய்!
வசைபாடும் சமணரை வேரோடு சாய்த்திட
வந்தாய் நீ சம்பந் தனாய்!
இசைபட வாழ்ந்திட்ட பட்டிணத் தடிகட்கும்
ஏற்றவழி கண்டு சொன்னாய்!
நரைதிரை வருகின்ற நடுத்தர வயதினில்
நாய்படும் பாடுபட்டு
இறை உனை எண்ணியே ஏங்கினேன் ஏங்கினேன்
என்குறை தீர்த்தல் என்று?
மனையறம் காக்கின்ற மாசிலாத் தங்கம் நீ
மலையிலே நின்றுவிட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன மகனே!

தவஞ்செய்ய மலையிலே தனியாக நிற்கையில்
தண்டமும் கையில் ஏனோ?
தவக்கோலம் பூண்டபின் தளிரான இருமாதர்
துணைநாடிச் செல்லல் முறையோ?
தவஞ்செய்யும் வேளையில் அலையான பக்தரால்
தவமது கலைந் திடாதோ?
தவஞ்செய்யும் தனிஇடம் தரணியில் என்மனம்
தம்பிநீ அங்கு வா வா!
தவஞ்செய்யும் குருவுக்கும் தவஞ்செய்யும் குமரிக்கும்
தவமாக வந்த தமிழே!
தவஞ்செய்யும் முனிவர்க்கு முடிவான ஞானத்தைத்
தக்கபடி அருளும் தவமே!
தவஞ்செய்ய மனங்கொண்டு உமையாளின் மைந்தன்நீ
மலைமீது நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

இருதாரம் கொண்டு நீ என்றைக்கும் சிக்கலில்
எழிலோடு விளங்கு கின்றாய்!
ஒருதாரம் கொண்டநான் ஓயாது புலம்பியே
உலகினில் வாடு கின்றேன்!
அரிதாரம் பூசாமல் பலவேடம் பூண்டு நான்
அவனியில் உழலுகின்றேன்!
பரிகாரம் பலதேடிப் பலவாறு துயருற்றுப்
பாரினில் வாழு கின்றேன்!
கிரிஏழு வாழ்கின்ற நெடுமாலின் மருகோனே!
கீர்த்தி நான்பெறு வதென்று?
ஓரேழு பிறவிக்கும் அடங்காத பெருங்கடல்
ஊழினைக் கடப்ப தென்று?
துணையாக உனைநம்பி வாழ்கின்ற போதுநீ
மலையிலே நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

தாயாரின் துயரிலே சேயாகப் பிறந்தவன்
தன்துயர் சொல்ல வந்தேன்!
மாயாவிப் புலன்களின் மகுடிக்கு ஆடினேன்!
மயக்கங்கள் போக்க வருவாய்!
சீடனாய் வந்துவுன் சீர்பாதம் பணிகிறேன்
சிவகுரு ஆக வருவாய்!
மூடனாய் வாழ்கிறேன் ! முழுமதி தந்து என்
மூர்க்கங்கள் போக்கி வைப்பாய்!
மேலான பக்தியில் மெய்யாக உருகியுன்
மேன்மைகள் பாடும்போது
கோலான தண்டேந்திக் குருவடி வாகி என்
குற்றங்கள் போக்கி அருள்வாய்!
வினைபோக்கும் என்நாதன் வெற்றிதரும் வடிவேலன்
மலைமீது நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

என்வினை மூட்டையை என் தோளில் ஏற்றிநான்
இயன்றவரை சுமந்து கொண்டு,
கண்களை மூடியே கால்போன போக்கிலே
காலத்தைத் தள்ளு கின்றேன்!
அகவினைச் செயலாலே அகம்பாவம் தலைக்கேற
அழிவினைத் தேடி நானும்
அறிவினைத் தவறான வழிதனில் செலவிட்டு
அல்லலை நாடி நின்றேன்!
உறவினை ஏசியும் உண்மையைச் சாடியும்
உன்மத்தம் கொண்டிருந்தேன்!
ஊழ்வினை மொத்தமாய் எனைவந்து சூழ்கையில்
உன்னடி சரண் புகுந்தேன்!
மனதினில் வந்து என் மருளினைப் போக்காமல்
மலைமீது நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

கருவினில் தொடங்கிடும் மானுட வாழ்விது
கல்லறை செல்லு மட்டும்,
பொருளினைத் தேடிடும் போகத்தை நாடிடும்!
புகழுக்கு நாயாய் அலையும்!
அருளினைத்தேடாமல் அன்பினை நாடாமல்
ஆணவம் கொண்டு திரியும்!
இருளினைப் போக்கிட ஒளியினை ஏற்றாமல்
இன்னில் தொடர்ந்து வாழும்!
மண்மீது ஆசையும் பொன்மீது மோகமும்
மகிழ்வோடு கொண்டு அலையும்!
தன்பலம் குன்றியே தனிமையில் நிற்கையில்
தன்செயல் பற்றி ஆயும்!
இனிதான உன்னருள் அதைநாடி வருகையில்
மலைமீது நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

ஈராறு கரங்களில் ஏராள ஆயுதம்
இருக்கின்ற போதுநீயும்
போராடும் உன்மகன் துயரங்கள் போக்காது
பொறுமையாய் இருப்பதேனோ?
ஈராறு விழிகளில், ஈராறு செவிகளில்
ஒன்றினை மட்டும் நீயும்
தேறாத உன்மகன் திசைதனில் திருப்பிடத்
திருவுளம் கொள்ளும் ஐயா!
கூரான வேல்கொண்டு குன்றங்கள் பிளந்திட்ட
குருபரன் ஆன வேலா!
மாறான சூரர்க்கும் மகிழ்வோடு வரந்தந்து
மயிலாக்கும் ஞான வடிவே!
தேனான தீந்தமிழ்ச் சுவைநாடும் என்மகன்
மலைமீது நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

எதிரிகள் யாவரும் என்னுளே இருக்கையில்
எவரோ போராடுவேன்!
புதிரான இவ்வாழ்க்கைப் போராட்டம் தனைவெல்லப்
பொன்னடி சரண் புகுந்தேன்! 
கதிராடும் வயல்சூழும் கதிர்காமப் பூமியில்
கனலாக வாழும் அரசே!
கதியென்று உன்பாதம் முடிவாக வருகையில்
கண்மூடி நிற்ப தென்ன?
நதிசூடி வருகின்ற சிவனாரின் தோளேறி
விளையாடும் எங்கள் செல்வா!
விதிதரும் விளைவினை வினை மூலம் நான்பெற்று
விரக்தியில் வாடுகின்றேன்!
கனிவான செல்வமே காவியுடை பூண்டுநீ
மலைமீது நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

Sources: http://goo.gl/EybNWh

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து கொள்ள இந்தச் சொற்ச்சொடரை நினைவில் வைக்கவும்.

"திருச்சி ந்தையில் வெல்லமும் புளியும் விற்ற செல்வன் ஞானியானன்"

திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

இது சூரிய உதயம் 6.00 A.M என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உள்ளூர் நேரத்திக்கேற்ப மாற்றி கணக்கிடவும்.