Friday, November 28, 2014

பெருமை வாய்ந்த பிள்ளையார்


பிள்ளையார்.. பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்..

டிசம்பர் 21, 2010

கணபதியை கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பார்கள். விநாயகரின் நாபி பிரம்மனின் அம்சமாகவும், முகம் விஷ்ணுவின் அம்சமாகவும், இடது பாகம் சக்தியின் அம்சமாகவும், வலது பாகம் சூரிய அம்சமாகவும், முக்கண் சிவனின் அம்சமாகவும் விளங்குகிறது. இதனால் விநாயகர் ஒருவரை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைப்பதாக விநாயகர் புராணம் கூறுகிறது.

விநாயகர் - தனக்கு மேல் யாரும் இல்லாத வெற்றி நாயகர்
பிள்ளையார் - சிவசக்தியின் மூத்த பிள்ளை
கணேஷ், கணபதி - சிவனின் பூத கணங்களுக்கு தலைவர்
விக்னேஸ்வரர் - தடைகளைத் தகர்ப்பவர்
கஜமுகன், கஜராஜன் - யானை முகம் கொண்டவர்.

முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் இருப்பதைப்போலவே, விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. இவை விநாயகர் தலங்களில் பிரதானமானவையாக கருதப்படுகிறது.

முதல் படைவீடு - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு - கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு - நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நான்காம் படைவீடு - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு - காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு - கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்

யார் பட்டம் ஏன் வந்தது?

தாயை தாயார், தந்தையை தந்தையார் மாமியை மாமியார், என்று யார் அடைமொழி போடுவது ஒரு மரியாதைக்காக. நம் வீட்டு பிள்ளைகளை பிள்ளையாரே வருக என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், சிவ பார்வதியின் மூத்த பிள்ளை தெய்வக்குழந்தை இல்லையா? எனவே, தெய்வத்துக்குரிய மரியாதையுடன் பிள்ளையார் என்கிறோம். இந்த தெய்வத்தின் அருள்பெற்ற ஒரு பெண்மணியும் யார் பட்டம் பெற்றார். தமிழ் மூதாட்டி அவ்வையை பிள்ளையார், தன் தும்பிக்கையால் தூக்கி கைலாயம் கொண்டு போய் சேர்த்தார். எனவே, இந்தத் தெய்வப்புலவரையும் அவ்வையார் என்கிறோம்.

விநாயகரை கடலில் கரைப்பது ஏன்?

ஒருசமயம் பார்வதி தேவி, கங்கையில் நீராடிய போது தன் உடலிலிருந்த அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானை முகமும், மனித உடலும் கொண்டிருந்தது. அதை அவள் கங்கையில் எறிந்தாள். அந்த பொம்மை விநாயகராக வெளிப்பட்டது. இவரை பார்வதியும் கங்கையும் பிள்ளையாக ஏந்தி கொண்டனர். இதனால், விநாயகருக்கு பார்வதியும், கங்கையும் அன்னையர் ஆனார்கள். இந்த காரணத்தினால் தான் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கங்கையில் கரைக்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. பின்னர் கங்கையும் சேரும் இடம் கடல் என்பதால் விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

விக்ன ராஜர்

விநாயகருக்கு விக்ன ராஜர் என்ற பெயர் உண்டு. வரேணியன் என்ற மன்னனின் மனைவி புட்பகை கருவுற்றிருந்தாள். விநாயகர் கருவிலிருந்த குழந்தையை மறைத்து அதற்கு பதில் யானை முகத்துடன் தானே குழந்தையாக அவதரித்தார். இதனைக் கண்ட ராஜா குழந்தையை காட்டில் விடும் படி உத்தரவிட்டார். காவலர்கள் குழந்தையை காட்டில் பராசரமுனிவர் ஆஸ்ரமத்தின் அருகே விட்டனர். முனிவர் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். அப்போது கிரவுஞ்சன் என்ற அசுரன் பெருச்சாளி உருவெடுத்து அங்கிருந்த முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தான். இவனுக்கு விக்னன் என்ற பெயரும் உண்டு. விநாயகர் அவனை அடக்கி தன் வாகனமாக்கி கொண்டார். அன்றிலிருந்து விநாயகர் விக்னராஜா ஆனார்.

பிள்ளையாரின் ஆயுதங்கள்

பொதுவாக பிள்ளையார் ஐந்து கைகளில் மேல் இரண்டு கைகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார். இவை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். இவரது ஆயுதங்கள் மொத்தம் 29. பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாக பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி, தண்டம், கமண்டலம், பரசு, கரும்புவில், சங்கம், புஷ்ப பாணம், கோடரி, அட்சர மாலை, சாமரம், கட்டு வாங்கம், சக்கரம், அகல் விளக்கு, வீணை ஆகியவை.

விநாயகரின் 16 திருநாமங்கள்

பாலகணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்னராஜா கணபதி, க்ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, புவனேச கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி.

வீணை விநாயகர்

விநாயகரை கையில் மோதகம், கொழுக்கட்டை வைத்தபடி பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரை சரஸ்வதிக்குரிய வீணையை கைகளில் வைத்தபடி ஈரோடு அருகிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கு அம்பாள் வேதநாயகி சன்னதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் இவர் சிற்ப வடிவமாக இருக்கிறார். புலிக்கால்களுடன் இருக்கும் இவருக்கென தனி வழிபாடு கிடையாது. அம்பாள் வேதநாயகியின் இடது காலடியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இசைப் பயிற்சி பெறுபவர்கள் அம்பாள் சன்னதி முன்பு நின்று இவ்விரு விநாயகர்களையும் தரிசித்தால், இசைக்கலையில் சிறப்பான தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை.

அருகம்புல் அணிய ஏற்ற நட்சத்திரங்கள்

விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம்,  ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, ஆகிய 16 நட்சத்திர நாட்களில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.

அபிஷேக நட்சத்திரங்கள்

விநாயகருக்கு எந்தெந்த அபிஷேகம் என்னென்ன நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் தெரியுமா?

பாலபிஷேகம் - உத்திராடம்
சந்தன அபிஷேகம் - பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம்
தேனபிஷேகம் - ரேவதி
திருநீறு அபிஷேகம் - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம்
மஞ்சள் அபிஷேகம் - மிருகசீரிஷம், பூரம், அனுஷம்
செந்தூரக் காப்பு - திருவாதிரை
அன்னாபிஷேகம் - பூரம்
ஸ்வர்ண (தங்க இலை) அபிஷேகம் - திருவோணம்

விநாயகரின் ஐந்து கைகள்

விநாயகப்பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. இதனால் இவர் ஐந்து கரத்தான் என அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து கைகளும் சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.

அங்குசம் தாங்கிய வலது மேல் கை  - சி
பாசம் பற்றிய இடது மேல் கை - வா
தந்தம் ஏந்திய வலது கை - ய
மோதகமுள்ள இடது கை - ந
துதிக்கை - ம

வெல்லப் பிள்ளையார்

விநாயகரை மஞ்சள், வெள்ளெருக்கு வேர் ஆகியவைகளில் செய்து வழிபடுவார்கள். அத்துடன் சாணம், புற்றுமண், வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் செய்து வழிபாடு செய்தால் மறுபிறப்பில்லா நிலையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் விளக்கு

விநாயகர் சதுர்த்தியன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் விளக்கேற்றி வழிபடலாம். இதற்காக விநாயகர் உருவத்துடன் அமைந்த விளக்குகள், குத்து விளக்கின் உச்சியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பிலும் கிடைக்கிறது. விநாயகர் தன் கையில் விளக்கை பிடித்து, அதில் தும்பிக்கையை வைத்தபடி ஒரு விளக்கு வந்துள்ளது. பரந்த வயிற்றுடன் இருக்கும் விநாயகரின் வயிறு, உலகத்தை குறிக்கிறது. அதாவது ஜீவராசிகள் அனைத்தும் அவருக்குள் ஐக்கியம் உணர்த்தும் வகையில் இவ்விளக்கு உள்ளது.

கல்யாண வரம் தரும் கட்டை பிரம்மச்சாரி

தனக்கொருத்தி இல்லாமல் தனித்திருக்கும் சுவாமியை சுற்றிச்சுற்றி வந்து, எனக்கொருத்தி வேண்டுமென கேட்கிறார்கள் பிரம்மச்சாரிகள். கல்யாணம் செய்து கொள்ளாத இந்த கட்டைப் பிரம்மச்சாரியிடம் இதை கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது தெரியுமா? வள்ளியை மணம் முடிக்க முருகப்பெருமாள் பகீர தப்பிரயத்தனம் செய்து பார்த்தார். கதை நடக்கவில்லை. கடைசியில் அவர் கூப்பிட்டது தன் அண்ணனைத் தான்! அவர் யானை வடிவில் வந்தார். வள்ளியை விரட்டினார். அவள் பயந்து போய், வேடன் வடிவில் வந்த முருகனைத் தழுவி நின்று கொண்டாள். காதல் மலர்ந்தது. கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காத ஒன்றை யாருக்கும் கிடைக்க விடக்கூடாது என்ற எண்ணமுள்ளவர்கள் தான் உலகத்தில் அதிகம். ஆனால், விநாயகரோ, தனக்கு இல்லாததை கூட பிறருக்கு தரும் அருள் வள்ளல். அதனால் தான் பிரம்மச்சாரிகள் அவரைத் தேடிப் போகிறார்கள்.


No comments:

Post a Comment

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து கொள்ள இந்தச் சொற்ச்சொடரை நினைவில் வைக்கவும்.

"திருச்சி ந்தையில் வெல்லமும் புளியும் விற்ற செல்வன் ஞானியானன்"

திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

இது சூரிய உதயம் 6.00 A.M என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உள்ளூர் நேரத்திக்கேற்ப மாற்றி கணக்கிடவும்.